Monday, April 29, 2024

வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி! சிறந்த இனிப்பு போட்டியில் பரிசு எதற்கு?

White Sugar or Jaggery : வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக, பலரும் நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, பனைவெல்லம் அல்லது கருப்பட்டியை முன்வைப்பது சரியா? உண்மை என்ன?

by Talks Tamil
0 comment 10 views

சுவையில் இனிப்பாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பானதாக இருக்காது வெள்ளை சர்க்கரை என மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர். எனவே, இனிப்புக்காக வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக, பலரும் நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, பனைவெல்லம் அல்லது கருப்பட்டியை முன்வைக்கிறார்கள். இதனால், ஆர்கானிக் சர்க்கரை, ஆர்கானிக் கருப்பட்டி என்று மலிவான விலையில் கிடைத்துக் கொண்டிருந்த இனிப்பு மூலபொருட்களில் விலை மிகவும் அதிகரித்துவிட்டது.

நாட்டு சர்க்கரை, கருப்பட்டியில் செய்யப்படும் இனிப்புகள் அல்லது பலகாரங்களை, மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் தயங்குவதில்லை. உண்மையில் நாட்டுச் சர்க்கரை கருப்பட்டி போன்றவை நாம் நினைக்கும் அளவுக்கு உடலுக்கு நல்லதா? என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

சர்க்கரையின் அடிப்படை உண்மைகள்

வெள்ளைச் சர்க்கரையோ, நாட்டுச் சர்க்கரையோ, தேனோ அல்லது பனை வெல்லமோ எதுவாக இருந்தாலும் அவை மாவுச் சத்து தான். 1 கிராம் மாவுச்சத்தில் 4 கலோரிகள் உள்ளது என்பது பொதுவானது. ஊட்டச்சத்துக்கள் என்று பார்த்தால், வெள்ளைச் சர்க்கரைக்கும் வெல்லத்திற்கும் வித்தியாசம் உள்ளது. வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. ஆனால், வெள்ளை சர்க்கரையில் அனைத்தும் நீக்கப்பட்டுவிடுகின்றன.

எனவே,  குழந்தைகளுக்கு வெள்ளைச் சர்க்கரையை விட வெல்லம் கொடுப்பது நல்லது என்பதே ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது. இதற்கான காரணம் என்ன?

கிளைசிமிக் இன்டெக்ஸ் (Glycemic index)

ஒரு உணவை நாம் உண்ணும்போது, நம் உடலின் சர்க்கரை அளவு எவ்வளவு கூடுகிறது என்பதை காட்டுவது கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும். இந்தக் குறியீடு. கருப்பட்டி, நாட்டு சர்க்கரை போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது  35 ஆக இருக்கும். ஆனால் வெள்ளைச் சர்க்கரை எடுத்துக்கொண்டால், கிளைசிமிக் இண்டெக்ஸ் 60 ஆக இருக்கும். இது மிகவும் அதிகம் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

எனவே, கிளைசிமிக் இண்டெக்ஸ் என்ற குறியீட்டின் அடிப்படையில், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவை நல்லவையே. தேனும் அப்படிதான், உடலின் சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்துவதில்லை என்பதுடன், வெல்லத்தை விட கருப்பட்டியை விட மேலும் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது தேன்.

இனிப்பு என்று எடுத்துக் கொண்டால், எந்தவகையாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து தான் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சுக்ரோஸ் அளவு

வெள்ளைச் சர்க்கரைக்கு, நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி என வேறு தெரிவுகளை நோக்கிச் செல்வதில் அர்த்தம் இல்லை. கரும்பிலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, 100% சுக்ரோஸுடன் வருவது தான் வெள்ளைச் சர்க்கரை. அதுவே நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் என்று எடுத்துக் கொண்டால் அவற்றில், 90 முதல் 92% சுக்ரோஸ் இருக்கும். கருப்பட்டியில் 85 முதல் 90% சுக்ரோஸ் இருக்கும்.

தேன் என்றால் 80% சுக்ரோஸ் இருக்கும் என்பதால், சர்க்கரை, நாட்டு சர்க்கரை, கருப்பட்டி தேன் என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் இல்லை. உண்மையில் நாட்டுச் சர்க்கரையில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் என்பதால், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தும்போது பயன்படுத்தும் அளவு அதிகரிக்கும். இது சுக்ரோஸ் அளவையும் அதிகரிக்கும் என்பதால் எந்த சர்க்கரையாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.

எனவே எந்த சர்க்கரையாக இருந்தாலும் சரி, கருப்பட்டி அல்லது தேனாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் அதை அளவாக தான் எடுக்க வேண்டும். இனிப்பு என்ற ஒரே சுவையை அதிகம் சேர்த்துக் கொள்வது உடல்நலனை பாதிக்கும் என்பதே ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Tamilan Talks இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x