Thursday, May 16, 2024

கிரெடிட் கார்ட் விதிகளில் முக்கிய மாற்றம்: சுற்றறிக்கை வெளியிட்ட RBI

RBI Update: 10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் ஆக்டிவ் கார்டுகளை வழங்கியுள்ள கிரெடிட் கார்டு வழங்குபவர்களுக்கு இந்த வழிமுறைகள் பொருந்தாது

by Talks Tamil
0 comment 27 views

RBI Update: கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது.  கிரெடிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) புதன்கிழமை வெளியிட்டுள்ளது. கார்டுகளை வெளியிடும்போது, வாடிக்கையாளர்கள் பல கார்டு நெட்வொர்க்குகளிலிருந்து தங்களுக்கு வேண்டிய கார்டை தேர்வு செய்யும் வசதி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கூறியது என்ன?

மற்ற கார்டு நெட்வொர்க்குகளின் சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் எந்தவித ஏற்பாடுகளிலோ அல்லது ஒப்பந்தத்திலோ கிரெட் கார்டுகளை வழங்கும் நிறுவனங்கள் கிரெடிட் கார்டு நெட்வொர்க்குகளுடன் ஈடுபட கூடாது என ஆர்பிஐ (RBI) கூறியுள்ளது. கார்டுகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களது தகுதியான வாடிக்கையாளர்களுக்கு, கார்டுகளை வெளியிடும் நேரத்திலேயே பல  கார்டு நெட்வொர்க்குகளில் தங்களுக்கு விருப்பமான கார்டை தேர்வு செய்வதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என மத்திய வங்கி கூறியுள்ளது. ஏற்கனவே கார்டுகள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் அடுத்த முறை கார்டுகளை புதுப்பிக்கும்போது, இந்த வசதி வழங்கப்படலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் ஆக்டிவ் கார்டுகளை வழங்கியுள்ள கிரெடிட் கார்டு வழங்குபவர்களுக்கு மேலே உள்ள வழிமுறைகள் பொருந்தாது. இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி மேலும் கூறியுள்ளது.

ஆர்பிஐ சுற்றறிக்கை

“கிரெடிட் கார்டுகளை (Credit Cards) வழங்குவதற்காக வங்கிகள் / வங்கிகள் அல்லாத நிறுவனங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கார்டு நெட்வொர்க்குகள் இணைந்துள்ளன. வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட கார்டுகளுக்கான நெட்வொர்க் தேர்வு கார்டு வழங்குபவரால் (வங்கி / வங்கி அல்லாதது நிறுவனங்கள்) தீர்மானிக்கப்படுகிறது. கார்டு வழங்குபவர்கள் தங்கள் கார்டு நெட்வொர்க்குகளுடன் உள்ள தங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில்  உள்ள ஏற்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு மதிப்பாய்வில், கார்டு நெட்வொர்க்குகள் மற்றும் கார்டு வழங்குபவர்களுக்கு இடையே இருக்கும் சில ஏற்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்தேர்வு கிடைப்பதற்கு ஏற்றதாக இல்லை என்பது கண்டறியப்பட்டது” என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் (RBI Circular) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களின் செயல்பாட்டு நோக்கத்திற்காக, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன், டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் லிமிடெட், மாஸ்டர்கார்டு ஆசியா/பசிபிக் பிரைவேட் லிமிடெட், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா–ரூபே மற்றும் விசா வர்ல்ட்வைட் ப்ரைவேட் லிமிடெட் ஆகிய அங்கீகரிக்கப்பட்டகார்டு நெட்வொர்க்குகளை ஆர்பிஐ வரையறுத்துள்ளது.

ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களில் திருத்தங்களை செய்யும்போதும், புதிய ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும் போதும், கார்டு வழங்குபவர்கள் மற்றும் கார்டு நெட்வொர்க்குகள் மேற்கூறிய விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. தங்கள் சொந்த அங்கீகரிக்கப்பட்ட அட்டை நெட்வொர்க்கில் கிரெடிட் கார்டுகளை வழங்கும் கார்ட் வழங்குநர்கள் இந்த புதிய சுற்றறிக்கையின் பொருந்தக்கூடிய தன்மையிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று ரிசர்வ் வங்கி மேலும் கூறியுள்ளது. அடிக்கடி கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சமீபத்திய மாற்றம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x