Sunday, May 26, 2024

ஆசியக் கோப்பை இறுதியில் இலங்கை! இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணி

by Ganesh Kumar
0 comment 273 views

PAK vs SL Asia Cup 2023: ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை! பாகிஸ்தானின் வெளியேற்றம் குறித்து கேப்டன் பாபர் என்ன சொன்னார்?

ஆசியக் கோப்பை இறுதியில் இலங்கை! இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான். அபாரமாக ஆடி ஜெயித்த இலங்கை அணி.

கொழும்பு: நடப்பு ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில்,இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கையின் வெற்றி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றுப்போய் போட்டித்தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.

மழையால் போட்டி பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவிய நிலையில், மழையின் காரணமாக போட்டி துவங்குவது தாமதமானது. இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமான நிலையில், போட்டியின் ஓவர்கள் 45ஆக குறைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மழை பெய்ததால் 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணிக்கு மழை மட்டுமல்ல, வேறு சில இடைஞ்சல்களும் இருந்தது.  இமாம் உல்-ஹக்குக்கு முதுகுவலியால் ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பஹர் ஜமான் சேர்க்கப்பட்டார். ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் காயமடைந்ததால், அவர்களுக்கு பதிலாக முகமது வாசிம், ஜமன் கான், முகமது வாசிம் ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர்.தற்போது, நடப்பு சாம்பியன் இலங்கையும், ஏற்கனவே அரையிறுதியில் தகுதி பெற்ற இந்தியாவும் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதும்.

அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து, 252 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கிய நிலையில், இலங்கையின் குசால் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்ரமா அற்புதமாக விளையாடினார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய இந்த இணை100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குசால் மெண்டிஸ் 87 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் கிடைத்தது. நான்காவது பந்தில் மதுசன் ரன் அவுட் ஆனதும் ஆட்டத்தில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

கடைசி இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை சரித் அசலங்கா அடித்தபோது அது எட்ஜ் எடுத்து ஸ்லிப் பகுதியில் பவுண்டரி போனதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்திற்குச் சென்றது.

ஆனால், கடைசிப் பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்ட நிலையில், அசலங்கா இரண்டு ரன்கள் எடுத்து, இலங்கை அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

அணியின் தோல்வியால் கோபமடைந்த கேப்டன் பாபர்!

ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசம் வருத்தத்தைப் பகிர்ந்துக் கொண்டார். ‘இலங்கை நன்றாக விளையாடியது, எங்களை விட சிறப்பாக விளையாடியது, அதனால் தான் வெற்றி பெற்றது. பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் சரியில்லாததால் நாங்கள் தோற்றோம். மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரம ஜோடி நன்றாக விளையாடியது. ஆனால் நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை” என்று பாகிஸ்தான் கேப்டன் தெரிவித்தார்.

இலங்கை அணி, 11-வது முறையாக ஆசியக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியது. இன்னும் இரண்டு நாட்களில், அதாவது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவை சந்திக்கிறது. ஆசியக் கோப்பை துவங்கப்பட்ட 39 ஆண்டுகளில், இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டதில்லை என்ற நிலையில், இந்த ஆசியக் கோப்பை அந்த குறையை நிவர்த்தி செய்யுமா என்ற ரசிகர்களின் ஏக்கம் நிறைவேறாமல் போய்விட்டது.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x