Saturday, May 18, 2024

தோனியை போல் ரோஹித்… கேப்டன்ஸியில் கெத்து காட்டும் ஹிட்மேன் – 3ஆவது கப் லோடிங்!

Rohit Sharma: இந்திய அணியில் தோனிக்கு கிடைத்தே அதே மதிப்பு ரோஹித் சர்மாவுக்கும் உள்ளது என சுரேஷ் ரெய்னா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரோஹித்தின் கேப்டன்சி இந்த உலகக் கோப்பையில் எப்படி உள்ளது என்பதை இதில் காணலாம்.

by Talks Tamil
0 comment 196 views

ரோஹித் தலைமையில் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையை இந்தியா இழந்தது.

2023 WTC கோப்பையையும் ரோஹித் தலைமையில் இந்தியா தவறவிட்டது.

இருப்பினும், நடப்பு உலகக் கோப்பையில் ரோஹித் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார்.

ICC World Cup 2023, Rohit Sharma: கிரிக்கெட் என்பது மற்றொரு மதம், அதில் வீரர்கள் ஏறத்தாழ வழிபாட்டுக்கு உரியவர்கள் என்பது பலரும் சொல்லும் கருத்தாக உள்ளது. ஆனால், இங்குதான் மாறுப்பட்ட கருத்து எழுகிறது. கிரிக்கெட் மதத்தை போல பார்க்கப்பட்டாலும், இந்திய வீர்ரகளை கொண்டாடும் அதே வேளையில் உள்ளூர் ரசிகர்களே கடுமையாக வசைப்பாடுவதையும் நாம் ஒதுக்கிவிட முடியாது.

ஐபிஎல் ரசிகர்களும்… விமர்சனங்களும்!

தற்போதைய ஐபிஎல் காலகட்டத்தில் பல அணிகளால் (தற்போதைக்கு 10 அணிகள்) இந்திய வீரர்கள் பிரிந்துள்ளனர். சச்சின், கங்கூலி, டிராவிட், சேவாக் என ஐபிஎல் வலுபெற்றிராத அந்த காலத்திலும் வெவ்வேறு விதமான ரசிகப்படைகள் இருந்தாலும், அவர்கள் வீரர்களின் அணுகுமுறை, ஆட்ட நுணக்கம் போன்றவற்றால் வேறுபட்டார்களே அணியால் அல்ல.

அதாவது, ஐபிஎல் ரசிகர்கள் என்றே தனிக்கூட்டம் உருவாக்கியிருப்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. இவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள், பார்க்கவே மாட்டார்கள். அந்த வகையில், தற்போதைய ஒருநாள் கிரிகெட்டுக்கான நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup 2023) என்பது இந்த ஐபிஎல் ரசிகர்களுக்கு வேறுபட்டதாக உள்ளது. இருப்பினும், அதில் அவர்களின் ஆதர்ச நாயகர்களான ரோஹித், விராட், பும்ரா, ஹர்திக் உள்ளிட்டோர் ஒன்றாக, அதாவது ஒரே அணியில் விளையாடுகின்றனர்.

அந்த ரீதியில்தான் உள்ளூரிலேயே ரோஹித்திற்கும், விராட்டிற்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் எழும் விமர்சனங்களை நாம் அணுக வேண்டும். இந்த விமர்சனங்களை அள்ளிவீசும் ரசிகர்களையும், பழைய சச்சின் காலத்து ரசிகர்களையும் நாம் ஒரே தராசில் வைக்க முடியாது. அந்த வகையில், தற்போது ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி மீது அடுக்கடுப்படும் விமர்சனங்களையும் நாம் அப்படிதான் பார்க்க முடியும்.

என்ன செய்தார் ரோஹித்?

ரோஹித் சர்மா (Rohit Sharma) ஐபிஎல் போட்டிக்கு தலைமை தாங்கவே சரியாக இருப்பார் என்பது அவர் குறித்த பொதுவான விமர்சனம். அவரின் சமீபத்திய பார்ம் குறித்த கருத்துகளும் அடிக்கடி எழும். கூடவே, கடந்த 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டியில் தோல்வி என இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையிலும் இரண்டு ஐசிசி கோப்பைகளை இழந்திருப்பது இதற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. ஆனால், நடப்பு உலகக் கோப்பை தொடர் பார்ப்பவர்கள் இந்த கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபடுவார்கள். அதற்கு அவர் இந்த தொடரில் கேப்டன்ஸியிலும், பேட்டிங்கிலும் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை இங்கு காணலாம்.

அடம்பிடிக்கும் ரோஹித்…

கேப்டன் என்ற முறையில் களத்தில் மட்டுமின்றி களத்திற்கு வெளியேவும் ரோஹித் சர்மா (Rohit Sharma Captaincy) சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆசிய கோப்பை அணியை அறிவிக்கும்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த அத்தனை பதில்களிலும் ஒரு நேர்த்தி இருந்தது. அஸ்வின், சஹாலுக்கு வாய்ப்புகள் அடைக்கப்படவில்லை என்றார் அதேபோல் அக்சருக்கு மாற்றாக அனுபவ வீரர் என்ற முறையில் அஸ்வினை உள்ளே கொண்டு வந்தார். மேலும், இந்தியாவுக்கு 8ஆவது வீரரும் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், அந்த இடம் அஸ்வின்/ஷர்துல் ஆகியோருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருக்கிறது.

வீரர்களின் மீதான நம்பிக்கை

பிளேயிங் லெவன் ஒருபுறம் இருக்க, எந்தெந்த வீரர்கள் அணியில் என்ன பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். ஓப்பனிங் பிரச்னையில்லை என்றாலும் மிடில் ஆர்டர் என்பது இந்தியாவின் நீண்ட கால பிரச்னை. இதில், ஷ்ரேயாஸ் – கேஎல். ராகுல் என்று காயத்தில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்தவர்களை கொண்டு நிரப்ப பலரும் தயங்குவார்கள். ஆனால், ரோஹித் – டிராவிட் ஜோடி அதில் உறுதியாக நின்று தற்போது அதன் பலனை அறுவடை செய்து வருகிறது.

முன் நின்று போராடும் ரோஹித்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா போட்டியில் அவர் பேட்டிங்கில் சொதப்பினாலும் ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் போட்டியில் அதை ஈடுகட்டி தற்போது நடப்பு தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய பேட்டராக உருவெடுத்துள்ளார். கேப்டனாக முன்னின்று போரிடும் முனைப்பை ரோஹித் சர்மா (Rohit Sharma Batting) இங்கு காட்டியுள்ளார்.

களத்தில் கேப்டன்ஸி

களத்தில் அவருடைய செயல்பாடு என்று பார்க்கும்போது, பாகிஸ்தான் போட்டியை உதாரணமாக சொல்லலாம். சிராஜ் தொடக்க ஓவர்களில் அதிக ரன்கள் அடித்தாலும் அவரை தொடர்ந்து (4 ஓவர்கள்) வீச வைத்தார். அதில், அப்துல்லா ஷஃபீக்கை சிராஜ் வீழ்த்தினார். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரான ஷர்துலுக்கு முன் பாண்டியாவுக்கு வாய்ப்பளித்தது, பாபர் அசாம் களத்தில் இருந்தபோது பந்து தேயாமல் இருந்தபோதும் குல்தீப் யாதவை வீச வைத்தது, குல்தீப் யாதவிற்கு அது சரியாக வரவில்லை என்பதை உணர்ந்து ஷர்துலுக்கு சென்றது என சொல்லிக்கொண்டே போகலாம்.

தோனியைப் போல் ரோஹித்

சமீபத்தில் ரோஹித் குறித்து சுரேஷ் ரெய்னா (Suresh Raina) கருத்து கூறியிருந்தார். அந்த கருத்தே இதற்கு சிறப்பான முடிவாக இருக்கும். ரெய்னா கூறியதாவது,”நான் வீரர்களுடன் பேசும் போதெல்லாம், தோனியை போலவே ரோஹித்துக்கும் மரியாதை உண்டு என்று சொல்வார்கள். ரோஹித் டிரஸ்ஸிங் ரூமில் மிகவும் நட்பாக இருக்கிறார்.

ஈ சாலா கப் நமதே…

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி (MS Dhoni) அவர்தான் என்று நான் கூறுவேன். நான் அவரைப் பார்த்திருக்கிறேன், அவர் அமைதியாக இருக்கிறார், அவர் வீரர்களிடம் இருந்து கேட்க விரும்புகிறார், வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க விரும்புகிறார். அதற்கும் மேல், அவர் முன்னணியில் இருந்து வழிநடத்த விரும்புகிறார். கேப்டன் முன்னால் இருந்து வழிநடத்தும் போது, அதே நேரத்தில், டிரஸ்ஸிங் ரூம் சூழலுக்கு மரியாதை கொடுக்கிறார், உங்களுக்குத் தெரியும்” என்றார். அதாவது, ஈ சாலா கப் நமதே!!!

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x