Saturday, May 25, 2024

தோனி ஏன் அர்ஜுனா விருது வாங்கவே இல்லை..! காரணம் இதுதான்..!

MS Dhoni Arjuna Award: சச்சின், கங்குலி, விராட், ரோஹித் என பல முன்னணி வீரர்கள் அர்ஜுனா விருதை வென்றிருக்கும் நிலையில், தோனி மட்டும் அந்த விருதை வாங்கவில்லை. இதுகுறித்த பின்னணியை இங்கு காணலாம்.

by Talks Tamil
0 comment 48 views

MS Dhoni Arjuna Award: கிரிக்கெட் இந்தியாவில் பல தசாப்தங்களாக விளையாடப்பட்டு வருகிறது. காலனியாதிக்க காலத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டு இந்தியர்களின் கலாச்சார வேர்களுக்குள் நீக்க முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டது எனலாம். இருப்பினும் கிரிக்கெட் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் செல்ல உதவியது எதுவென்றால், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை கபில் தேவ் தலைமையில் இந்திய அணி கைப்பற்றிய அந்த நொடிதான் எனலாம்.

அந்த வெற்றிக்கு பின் சச்சின், கங்குலி என பல வீரர்கள் வெறிகொண்டு கிரிக்கெட்டை நோக்கி ஓடி வந்த நிலையில், அடுத்த 28 ஆண்டுகளாக இந்திய அணியால் அந்த உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றவே முடியவில்லை. அசாருதீன், கங்குலி என பல திறமை வாய்ந்த கேப்டன்களாலும் கோப்பையை நெருங்க முடிந்ததே ஒழிய அதை கைகளில் வாங்கி முத்தமிட முடியவில்லை எனலாம்.

2003ஆம் ஆண்டு ஓடிஐ உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் தோல்வி என்ற வீழ்ச்சியில் இருந்து 2007 ஓடிஐ உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேற்றம் என இந்தியா அதளபாதாளத்திற்கே சென்றது எனலாம். ஆனால், அதே ஆண்டுதான் இந்திய அணியில் ஒரு வெளிச்சம் பிறந்தது. 2007 டி20 உலகக் கோப்பை தொடருக்கு தோனி தலைமையில் சென்ற இந்திய அணி சாம்பியனாக நாடு திரும்பியது இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.

இளம் அணி வைத்துக்கொண்டு 2007 டி20 உலகக் கோப்பையை ஜெயித்தார் தோனி. ஆனால், அது வெறும் தொடக்கம்தான் என அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஓடிஐ உலகக் கோப்பையை, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும் இந்தியா வென்று சாதித்தது, இவரின் தலைமையில்தான். அதில் பல வீரர்களின் உழைப்பும், ரத்தமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

ரஜினியும்… தோனியும்…

ஆனால், இந்தியா 28 வருடங்களாக போராடி வந்த ஒன்றை பெற்றுத் தந்தது மட்டுமின்றி இந்தியாவின் ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய பகுதியில் இருந்து வந்து ஒட்டுமொத்த நாட்டுக்கே ஒரு ஊக்கமாக விளங்குவது என்பது சாதாரணமானதில்லை. தோனி இந்தியாவுக்கு செய்தது அதுதான். ரஜினிகாந்த் போல் யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் திறமை மட்டும் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற ஊக்கத்தை தோனி வழங்கியிருந்தார்.

ஐந்து ஐபிஎல் கோப்பைகள் உள்பட பல சாதனைகளையும் பெருமைகளையும் தோனி பெற்றுள்ளார். சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னரும் அவருக்கான மவுஸ் மட்டும் குறையவே இல்லை. ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் போட்டியை மட்டும் காண ஆயிரக்கணக்கில் மக்கள் மைதானத்தில் குவியும் காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்துள்ள தோனிக்கு ஏன் அர்ஜுனா விருது கொடுக்கப்படவில்லை என அவரின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அர்ஜுனா விருது ஏன் இல்லை?

ஷமி உள்ளிட்டோர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் கைகளால் அர்ஜுனா விருதை இன்று பெற்றனர். கடந்த காலங்களிலும், கபில் தேவ் தொடங்கி சச்சின், கங்குலி, விராட் கோலி, அஸ்வின், ரோஹித், ஜாகீர் கான், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் அர்ஜுனா விருதை வென்றிருக்க தோனி மட்டும் ஏன் அந்த விருதை பெறவில்லை என சந்தேகம் எழுந்தன.

அதற்கு காரணம், 2007ஆம் ஆண்டே மகேந்திர சிங் தோனி கேல் ரத்னா விருதை வென்றுவிட்டார் என்பதுதான். அதாவது, விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் உச்சபச்ச விருதே தயான் சந்த் கேல் ரத்னா விருதுதான் (முன்னர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது). அதை வென்றுவிட்டதால் அவருக்கு அர்ஜுனா விருது கிடைக்கவில்லை எனலாம். மேலும், அர்ஜுனா விருது பெறாமல் நேரடியாக கேல் ரத்னா விருதை வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் தோனிதான் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின், விராட் கோலி, ரோஹித் சர்மா, மிதாலி ராஜ் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் கேல் ரத்னா விருதை வென்றுள்ளனர்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x