Monday, April 15, 2024

Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல… உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!

by Talks Tamil
0 comment 295 views

Iravin Nizhal Review: வித்தியாசமான முயற்சிகளை மட்டுமே தொடர்ந்து எடுத்து வரும் இயக்குனர் பார்த்திபன்(Parthiban) ராதாகிருஷ்ணன், இனி யாருமே முயற்சிக்க முடியாத அளவிற்கு எடுத்த முயற்சியே, ‛இரவின் நிழல்’. படம் திரைக்கு வருவதற்கு முன், ஊடகங்களுக்கான சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது.

படத்தின் கதை இது தான் என ஓரிரு வரியில் சொல்லி விட முடியும், இங்கு கதையைப் பற்றி பேசுவதில் பயனில்லை. கதையை அடைக்க பயன்படுத்தப்பட்ட முயற்சியைப் பற்றி பேசுவது தான், சரியாக இருக்கும். ‛ஒரு காட்சிக்காக 50 டேக் வாங்கினேன்…’ என பெருமையாக பேட்டியளிக்கும் பிரபலங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரே டேக்கில், ஒட்டுமொத்த படத்தையும் முடித்திருக்கிறார் பார்த்திபன்.

அதுவும் எளிதில் நடந்துவிடவில்லை. 23 வது டேக்கில் தான், படம் முடிந்திருக்கிறது. அப்படியென்றால், எப்படி ஒரு டேக் என்று தோன்றுகிறதா? ஒரே டேக் தான்… ஆனால் அது எந்த இடத்தில் சொதப்பினாலும், ஆரம்பத்திலிருந்து தொடங்கி, புது டேக்காக எடுக்க வேண்டும்; அப்படி தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல 23 முறை… அது போல, டேக், டேக், டேக் என… சிறு சிறு தவறுகளுக்கு கூட ரீ டேக் எடுத்து, ஒரு பெரிய போராட்டத்திற்கு மத்தியில் படத்தை நிறைவு செய்திருக்கிறார் பார்த்திபன்.

அந்த வகையில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட உலகின் முதல்படம் என்கிற பெயரை, இரவின் நிழல்(Iravin Nizhal) பெற்றுள்ளது. பொதுவாக ஒரு படம் பார்க்கும் போது, அதில் குறிப்பிட்ட சிலரின் முயற்சி அல்லது திறமை பாராட்டப்படும். ஆனால், இந்த படத்தைப் பொருத்தவரை,ஒரு கதாபாத்திரம் சொதப்பினாலும், மீண்டும் மறுமுறை படத்தை எடுக்க வேண்டும். அப்படியொரு காலகட்டத்தில் தான், ஒட்டுமொத்த அணியும் கடுமையாக உழைத்து, இந்த சாதனையை சமமாக பகிர்ந்துள்ளனர்.

நாய், குதிரை என விலங்குகள் கூட தன் பங்கிற்கு ஒத்துழைத்து, படம் நிறைவடைய உதவியிருக்கின்றன. ஒரு பெரிய இடத்தில் ‛செட்’ போட்டு, அதில் பல பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு காட்சிக்கும் தனித்தனி செட், லைட் எல்லாம் அமைத்து, ஒட்டுமொத்த படத்தையும், ஒரே கேமராவை தூக்கிக் கொண்டு, சினிமாவிற்கான தரமும் குறையாமல் ஒரு படைப்பை தந்திருக்கிறார் பார்த்திபன்.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு மெச்ச வேண்டியது. ஒரே நேரத்தில் காட்சி எடுக்கப்பட்டாலும், அதை ‛ஷாட் பை ஷாட்’ ஆக உணர வைப்பது, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தான். ஒரு உலகளாவிய முயற்சிக்கு யாரை அழைக்கலாம், யாரை தொகுக்கலாம், யாரை நியமிக்கலாம் என்பதை புரிந்து, ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரையும் பணியமர்த்தியிருக்கிறார் பார்த்திபன்.

இந்த படத்தை, நல்ல கதை, கேட்ட கதை என்றெல்லாம் கடந்து விட முடியாது; காரணம், இது கதைக்கான சினிமா அல்ல; கலைக்கான சினிமா. அதனால் தான், வழக்கமாக படம் முடிந்த பின் திரையிடப்படும் மேக்கிங் வீடியோவை, படம் தொடங்கும் முன் திரையிடுகிறார்கள். காரணம், அப்போது தான், அவர்களின் உழைப்பையும், முயற்சியையும், அடுத்து வரும் படத்தில் நம்மால் உணர முடியும்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல், எடிட்டிங் என இந்த முறை, அனைத்தையும் ஏறி அடித்திருக்கிறார் பார்த்திபன். வரலட்சுமி, ரோபோ சங்கர், ப்ரியங்கா ரூத், ப்ரிகிடா சகா, ஆனந்த்கிருஷ்ணன் என , ஒரு குட்டி ஆர்ட்டிஸ்ட் அணியை வைத்துக் கொண்டு, பெரிய சமர் புரிந்திருக்கிறார் பார்த்தி. தமிழ் சினிமாவிலிருந்து இப்படி ஒரு முயற்சி, உலக அரங்கிற்கு செல்வதற்காகவே, இந்த படத்தை கொண்டாடலாம்.

புதைத்து வைத்த விதை, முளைக்கும் வரை அதன் அருகில் காத்திருப்பதைப் போன்று, இரவின் நிழலை பதிவு செய்திருக்கிறார்கள். நிழல் எப்படி நம்மைத் தொடருமோ, அது போலவே இந்த சாதனை முயற்சியும், தமிழ் சினிமாவை பலர் பின் தொடர வைக்கும்!

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x