Friday, May 17, 2024

அரசுப்பள்ளியில் சேர்ந்தால் தங்க நாணயம் பரிசு..! தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!

by Talks Tamil
0 comment 264 views

Interesting Story In Tamil: பள்ளி சேர்க்கையை அதிகப்படுத்த தங்க நாணயத்தை பரிசாக வழங்குவதாகக் கூறி அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு வருவது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.

Tiruvarur District News: திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்தில் உள்ள சேங்காலிபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சேர்க்கையை மேலும் அதிகரிக்க புதிதாக அரசுப்பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என புதிதாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக சேரும் மாணவ மாணவிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அப்பகுதி மக்களின் வீடுகளுக்கு சென்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா துண்டு பிரசுரங்கள் கொடுத்து கூறி வருகிறார். அவருடன் பிற ஆசிரியைகளும் இணைந்துள்ளனர்.

அரசுப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் கற்பிக்கப்பட்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் இந்திரா. சேங்காலிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த இரண்டு வருடமாக மாணவர் சேர்க்கை என்பது குறைவாகவே உள்ளது. இதனால் தான் இந்திரா இந்த தங்க நாணயம் பரிசு தரும் ஐடியாவை வைத்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி எடுத்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் இவர் இந்தப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தளான ஜூலை 15 ஆம் தேதி “கல்வி வளர்ச்சி நாள்” கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தான் புதிய மாணவர்களின் பெயர்கள் குலுக்கல் செய்யப்பட்டு அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த மாணவருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என இந்திரா கூறியுள்ளார்.

மழைக்காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர ‘வேன் வசதி’ முதற்கொண்டு இந்த அரசுப்பள்ளியில் செய்யப்பட்டுள்ளதாம். அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆர்வத்துடன் களத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த தலைமை ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x