இந்தியா ஜிம்பாப்பே இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா-ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. ஜிம்பாபேவில் உள்ள ஹராரே என்னும் இடத்தில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ்ஸை வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். பிறகு முதலில் பந்து வீசிய இந்திய அணி ஜிம்பாபே அணியை 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சுருட்டியது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்குள் வந்திருக்கும் தீபக் சாஹர் அற்புதமாக பந்து வீசி தொடக்க ஆட்டக்காரர்களை செட்டில் ஆக விடாமல் பெவிலியன் அனுப்பினார்.

பின்னர் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்பே அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அற்புதமாக பந்து வீசிய தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரெஜிஸ் சகப்வா 35 ரன்களும், கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய ரிச்சர்ட் நகரவா 34 ரன்களும் எடுத்தனர். பிராட் எவன்ஸ் 33 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 110 ரன்களுக்குள் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் 125 ரன்களுக்குள் ஆட்டமிழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிச்சர்ட், பிராட் இவன்ஸ் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 189 ரன்கள் வரை அந்த அணி சேர்த்தது.