Monday, May 27, 2024

ICC World Cup 2023: அரையிறுதி சுற்றுக்கு இந்தியா முதல் அணியாக முன்னேறியது..!

Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக உருவெடுத்துள்ளதற்கு இந்த மூன்று வீரர்கள்தான் முக்கிய காரணம் எனலாம். அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை இதில் காணலாம்.

by Talks Tamil
0 comment 172 views

India National Cricket Team: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி வாரம் என்பதால் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெறும் நோக்கில் அனைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் நிறைவு செய்ய கடுமையாக போராடி வருகின்றன. நேற்றைய வங்கதேசம் – இலங்கை போட்டியும் கூட கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. இன்றும் நடைபெறும் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டிக்கும் கூட பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நடப்பு தொடரில் இந்திய அணியை (Team India) மட்டுமே வீழ்த்த முடியாத அணியாக 8 போட்டிகளிலும் வெற்றியை குவித்து முதலிடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளது. கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை வரும் நவ. 12ஆம் தேதி இந்தியா பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சந்திக்கிறது. அதன்பின், மும்பை வான்கடேவில் வரும் நவ. 14ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் (World Cup Semi-Final) இந்தியா விளையாடுகிறது. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை நிறைவு செய்யும் அணி இந்தியா உடன் மோதும். உலகக் கோப்பையை முத்தமிட இந்திய அணி வெறிகொண்டு காத்திருக்கிறது.

அந்த வகையில், இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஒரு வீரரை மட்டும் மொத்த அணியும் நம்பவில்லை என்பதுதான். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எதை எடுத்தாலும் களத்தில் உள்ள 11 பேரின் தொடர் பங்களிப்பால்தான் இந்தியா 8 போட்டிகளையும் வென்றுள்ளது. இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என முன்னணி அணிகளையும் அசால்ட்டாக வீழ்த்தியது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

எனினும், இந்திய அணியில் இந்த மூன்று வீரர்களின் அசாத்திய பங்களிப்புதான் இந்திய அணியை அசூர பலம் கொண்ட அணியாக மாற்றியுள்ளது எனலாம். இந்தியா எதிர்வரும் போட்டிகளில் தோல்வியடைய வேண்டும் என்றால் இந்த மூன்று வீரர்களை எதிரணி தடுத்தாக வேண்டும். ஒரு பேட்டர் – ஒரு ஆல்ரவுண்டர் – ஒரு பௌலர் என அந்த மூன்று வீரர்கள் குறித்து இதில் காணலாம்.

விராட் கோலி

இந்த லிஸ்டை யார் போட்டாலும் அதில் முதலில் வருபவர் விராட் கோலியாகதான் இருப்பார். நம்பர் 3இல் விராட் கோலி (Virat Kohli) நங்கூரமாக நின்று இந்திய அணிக்கு கொடுக்கும் நம்பிக்கை என்பது நமக்கு புதிதல்ல. என்றாலும் இந்த உலகக் கோப்பை ஸ்பெஷலாக மாற்றுவது என்னவென்றால் விராட் கோலியின் அந்த அனுபவமிக்க நிதானம்தான். ஓடிஐ பார்மட்டில் தன்னிகரில்லா மன்னன் என்பதை மற்றுமொரு முறை விராட் கோலி நிரூபித்துள்ளார்.

இந்த 8 போட்டிகளில் 543 ரன்களை எடுத்துள்ளார். சுப்மான் கில் (Shubman Gill) தான் இந்த தொடரில் அதிக ரன்களை குவிப்பார் என பல வீரர்கள் கணித்தாலும், ‘சரக்கு இன்னும் நிறைய இருக்கு’ என விராட் கோலி இந்த உலகிற்கு அடித்துச் சொல்லியிருக்கிறார். எதிர் வரும் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு விராட் கோலிதான் முக்கியப் புள்ளியாக இருப்பார். அதே நேரத்தில் ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) அதிரடி தொடக்கத்தையும் நாம் தவிர்க்க முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரவிந்திர ஜடேஜா 

ஹர்திக் பாண்டியாவின் காயத்திற்கு முன்னும், பின்னும் இந்திய அணி தடுமாறாமல் இருப்பதற்கு இவரும் ஒரு காரணம். சூர்யகுமார் நம்பர் 6இல் வந்து ஹர்திக்கின் இடத்தை நிரப்பினாலும் அந்த அனுபவத்தை ஈடுகட்டுவது என்பது என்னமோ ஜடேஜாதான். பந்துவீச்சில் 10 ஓவர்களை வீசி 30-40 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி ஒரு விக்கெட்டை மட்டும் எடுப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்திய பந்துவீச்சில் இவரின் பங்களிப்பை யாராலும் குறைச்சொல்லவே முடியாது என்றளவுக்கு ஜடேஜா (Jadeja) முதிர்ச்சி பெற்றுவிட்டார் எனலாம். கடந்த போட்டியில் 5 விக்கெட் எடுத்தது எல்லாம் அவருக்கு போனஸ்தான். பேட்டிங்கிலும் பினிஷர் ரோலை ஜடேஜா சிறப்பாக செய்கிறார். இதுவே ஒரு ஆல்ரவுண்டராக அவரை அசைக்க முடியாத வீரராக மாற்றியுள்ளது.

பும்ரா

பலரும் நடப்பு தொடரில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்றால் ஷமியைதான் கூறுவார்கள். கண்டிப்பாக அவர்தான் இந்திய பந்துவீச்சின் வலுவை கூட்டினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் ஷமி (Mohammed Shami) கடந்த 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானிமியிலும் கில்லியாக இருக்கிறார். எதிரணி பேட்டர்கள் ஷமியின் அப்ரைட் சீம்மிற்கு அடிபணிந்து போவதை நாமும் கண்டிருப்போம்.

ஆனால், பும்ராவின் (Bumrah) தொடக்க ஸ்பெல் என்பது மிக மிக முக்கியமானது. சிராஜ் பவர்பிளே ஓவரில் விக்கெட்டுகளை எடுத்து பும்ராவை ஓவர்டேக் செய்தாலும் பந்துவீச்சு என்பது வெறும் விக்கெட் எடுப்பது மட்டுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சிராஜ் உலகின் தலைசிறந்த பௌலர்களுள் ஒருவர், அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், பும்ரா தொடக்க ஓவர்களில் அதாவது நியூ பாலில் காட்டும் மாயாஜாலமும், அச்சுறுத்தலும்தான் எதிரணி பேட்டர்களை மன ரீதியாக தடுமாற வைக்கும். எனவே, வரும் நாக்அவுட் போட்டிகளில் சிராஜ், ஷமி ஆகியோரை விட பும்ராவை தடுத்தாடுவதுதான் பேட்டர்களுக்கு சிரமமாக இருக்கும்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x