Saturday, May 18, 2024

களத்தில் இறங்கிய விஜய்..! நிவாரணப் பொருள்களை மக்களிடம் கொடுத்த தளபதி..!

Actor Vijay In Tirunelveli: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 மக்களுக்கு நிவாரணப் பெட்டகம் உள்ளிட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

by Talks Tamil
0 comment 72 views

Actor Vijay In Tirunelveli: கடந்த டிசம்பர் 17, 18ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் நூற்றுக்கணக்கானோர் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து, அரசு தரப்பிலும் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையாக அறிவித்தது. பல சாலைகள், மேம்பாலம் என உட்கட்டமைப்புகள் மட்டுமின்றி குளங்கள் உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பல ஏக்கர் விளைநிலங்களும், அதன் பயிர்களும் பாழாகின.

களத்தில் நின்றி விஜய் மக்கள் இயக்கம்

தமிழ்நாடு அரசு தரப்பில் மட்டுமின்றி பல தன்னார்வலர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தினரும் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களிலும், கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களிலும் பல நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர். அதில் நடிகர் விஜயும் தனது மக்கள் மன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் எனவும் சில நாள்கள் முன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

நிவாரண உதவிகளை வழங்கிய விஜய்

இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களக்கு நிவாரணம் அளிக்கும் நிகழ்ச்சி விஜய் மக்கள் மன்றம் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதில் நடிகர் விஜய் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். முன்னதாக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், பின்னர் சாலை மூலம் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மண்டபத்திற்கு வருகை தந்தார். மேலும், உயிரிழந்தோர், வீடு இழந்தோர் உள்ளிட்ட பல்வேறு வகைமைகளில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ. 1 லட்சம் வரை நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 900 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 600 பேருக்கும் என மொத்தம் 1500 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த ஒரு வாரமாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்ததாக கூறப்படுகிறது. அதுவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது யாருக்கும் விளம்பரப்படுத்தாமல் மிகவும் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை சுமார் 20 வாகனங்கள் மூலம் அவர்களின் வசிப்பிடத்தில் இருந்து இந்த மண்டபத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், நிவாரணம் பெற வந்த அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணத்தொகை பலருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தூத்துக்குடியில் மக்கள் பணியின்போது ஜெனரேட்டரை இயக்கியபோது உயிரிழந்த ராபின்சன் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்தை நிவாரணத்தொகையாக நடிகர் விஜய் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்து சென்னையில்…?

நிவாரணத்தொகையை பெறுவோருக்கு அவர்களுக்கான காசோலையை நடிகர் விஜய் மக்களிடம் நேரடியாக வாங்னார். அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகங்களையும் நடிகர் விஜய் மக்களிடம் அளித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். மேடையில் நின்று மக்களை வரவழைத்து இந்த நிவாரணத்தை அளிக்காமல், அவர்களை இருக்கையில் அமரவைத்து அவர்களின் இடத்திற்கே சென்று அவர்களுக்கான நிவாரணத்தை வழங்கியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணம் அளித்தது போன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் நடிகர் விஜய் நிவாரணம் அளிக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x